மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

Published On:

| By Kavi

புயல், கனமழை காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் இன்று (டிசம்பர் 3) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனையும் தொடர்பு கொண்டு பேசினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புயல் காரணமாக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,967 இதர நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 350 பேர் கொண்ட 14 குழுக்கள், 225 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 2.44 கோடி மக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறோம்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து 685 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அவசரகால கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்படும். புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மூர்த்தி, காந்தி, முத்துசாமி உள்ளிட்டோர் மழை மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை 1000 இடங்களில் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

பிரியா

புரோ கபடி 10: டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ் ?

தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்‌ஷன்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel