நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி, கடந்த 2016ம் ஆண்டு 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவிப்பு வெளியிட்டார்.
பின்னர் யாருக்கும் புரியாத புதிராக ரோஸ் கலரில் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், ‘தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி’ இந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் அவற்றை வங்கியில் மாற்றுவதற்கு மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடுவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரில் உள்ள வியாபாரிகளிடம் மின்னம்பலம் கருத்து கேட்டது. அவர்கள் அளித்த கருத்துகளில் சிலவற்றை இங்கு காணலாம்.
சில்ற கொடுப்பது தான் பிரச்சனையே!
ராஜ் குமார், துணிக்கடை வியாபாரி
2000 நோட்டுகளை வாங்குறது பிரச்சனையில்ல. ஆனா 800 ரூபாய்க்கு பொருள் வாங்குவறவங்களுக்கு 1,200 ரூபாய் சில்ற கொடுக்கனும். அது தான் பிரச்சனையே. மக்கள் ஈசியா மாத்திட்டு போயிருவாங்க.. எங்களுக்கு தான் பிரச்சனையே.
அறிவிச்சிட்டு நல்லா உக்காந்துக்குறாங்க!
காட்டுப்பூச்சி, உணவகம்
எங்க கடையில் இப்போ 2000 நோட்டா தான் வருது. நாங்க வேணாங்கிறோம். அதுதான் இப்போ இருக்குனு கஸ்டமர்ஸ் சொல்றாங்க. இந்த மாறி அறிவிச்சா எப்படி வாங்க முடியும்? அறிவிச்சிட்டு அவங்க நல்லா உக்கார்ந்துக்குறாங்க. இருக்கப்பட்டவன் அனுபவிப்பான். ஆனா சிறு வியாபாரிகள், ஏழைங்க இவங்க தான் கஷ்டப்படணும்.
2000 நோட்ட வாங்க விரும்பவில்லை!
சந்தோஷ், நகை வியாபாரி
நான் இத்தன நாளா 2,000 நோட்ட பாக்கவே இல்ல. இப்போதான் 2, 3 நாளா பாக்குறேன். கஸ்டமர்ஸ் கிட்ட இருந்து 2000 நோட்ட வாங்க விரும்பல. அப்படியே வாங்கிட்டா நானும் இன்னொருத்தருகிட்ட அத கொடுக்கனும். அவரு வாங்கலன்னா. நான் பேங்க்ல போயி க்யூல நிக்கனும்.
பைத்தியக்காரத்தனம்!
வேலு, துணிக்கடை வியாபாரி
2,000 ரூபா நோட்ட விட்டதும் தப்பு. திரும்ப அத கேன்சல் பன்றதும் பைத்தியக்காரத்தனம். இத முடிவு எடுத்தார அவரும் ஒரு பைத்தியக்காரன் தான். 2000 நோட்ட பாத்து 2 வருஷம் ஆகுது. அதுல தான் சிப் இருக்குன்னு சொன்னாங்கல. அப்படின்னா அத வச்சி எங்க குவிச்சி கெடக்குதுன்னு பாக்க வேண்டி தானே?
98 சதவீதம் கறுப்பு பணம் ஒழியல!
ரவி தாசன், சாலையோர கம்மல் வியாபாரி
2,000 நோட்ட பத்தி நாங்க கண்டுக்குறதே கிடையாது. இப்போ அத நிறுத்தி வச்சது சந்தோசம் தான். போன வாட்டி கருப்பு பணம் ஒழியும்னு தடை பண்ணாங்க. ஆனா 98 சதவீதம் அது நடக்கலியே.
அறிவிச்சதுல இருந்து ஒரே பதட்டமா இருக்கு!
முகமது ஆசிக், துணிக்கடை வியாபாரி
2,000 நோட்டு இப்போ அதிகமா வர்றது இல்ல. அத வாங்குற ஐடியாவும் இல்ல. மத்திய அரசு அறிவிச்சதுல இருந்து ஒரே பதட்டமா இருக்கு. ஏனா வாங்கிட்டா அத வேற யாருக்கவாது மாத்தி விடனும். அவங்க வாங்கலன்னா அது பிரச்சன ஆயிடும்.
சில்ற கொடுப்பது தான் கஷ்டம்
அபி ரகுமான், துணிக்கடை வியாபாரி
இதுவரைக்கும் மக்கள் யாரும் கொடுத்ததில்ல. ஆயிரத்துல ஒருத்தரு தான் 2,000 நோட்டோட வர்றாங்க. ஆனா அவங்க கொடுக்கும் போது வாங்கிக்கிறோம். ஆனா சில்லற மாத்தி கொடுக்கறது தான் கஷ்டமா இருக்கு.
2000 நோட்டால் பதுக்கல் அதிகமாயிடுச்சி!
கிஷோர், உணவகம் மேலாளர்
பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல. ஆனா சிறு வியாபாரிகளுக்கு தான் பிரச்சனை இருக்கு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால ஒரு பயனும் கிடையாது. ஏனா அதனால கள்ள நோட்டு அழியல. கொள்ளையடிக்கிறவன், பதுக்குறவன் பதுக்கிகிட்டு தான் இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா 2,000 நோட்டுனால பதுக்கல அதிகமாயிடுச்சி.
எங்கக்கிட்ட யாரும் வாங்க மாட்டாங்க!
மோகன், சாலையோர துணி வியாபாரி
நான் 2000 நோட்ட கஸ்டர்மர்கிட்ட பாத்ததே இல்ல. எல்லோரும் இப்போ பேடிஎம், கூகுள் பே னு பணம் அனுப்பி விட்டு போயிறாங்க. அப்படியே நாங்க வாங்குனாலும் எங்ககிட்ட இருந்து யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க.
பதுக்கி வச்சிருக்கிறவங்களுக்கு தான் பிரச்சனை!
ரவி சங்கர், ஜவுளிக்கடை நிர்வாகி
நாங்க 2000 நோட்டு வாங்கிட்டு இருக்கிறோம். பதுக்கி வச்சிருக்கிறவங்களுக்கு தான் பிரச்சனையோ இருக்கும். மத்தபடி எங்களுக்கோ, மக்களுக்கோ இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கிறிஸ்டோபர் ஜெமா