மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வேளச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
வேளச்சேரியை பொறுத்தவரை மழை நின்றும் விஜயநகர் முதல் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது.
அதோடு விஜயநகர் முதல் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. நெட்வொர்க் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிதள பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசித்து வந்தவர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கும், மேல் தளங்களில் வசிப்பவர்களின் வீடுகளுக்கும் சென்று தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
பால், குடிநீர், உணவு இன்றி அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த பகுதியில் எப்போது தண்ணீர் வடியும், எப்போது மின் இணைப்பு வரும், எப்போது நெட்வொர்க் கிடைக்கும் என தெரியாமல் தவித்து வருகின்றனர். நெட்வொர்க் கிடைக்காததால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் உள்ளது.
இதனால் விஜயநகர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பி வருகின்றனர். மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கும், அருகாமையில் இருக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் செல்ல சாலைகளில் காத்திருப்பதை காண முடிகிறது.
ஆனால் வேளச்சேரி பகுதியில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஆட்டோக்களுக்கு நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
குறிப்பாக இந்த பகுதியில் மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
“கழிவறைக்கு செல்ல கூட முடியாமல் சிரமப்படுகிறோம். நிர்வாகத்தினரிடம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது என கூறுகின்றனர். மின்சாரம் வர 3,4 நாட்கள் ஆகும் என்கிறார்கள். அதனால் சொந்த ஊருக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருக்கிறோம் ” என்கின்றனர் விடுதிகளில் வசிக்கும் பெண்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
படங்கள் : கிட்டு