ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் அரிசி சாப்பிடவே முடியாத அளவிற்கு இருப்பதாக மனம் வெதும்புகின்றனர் வி.சாத்தனூர் கிராம மக்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது வி. சாத்தனூர் கிராமம். இங்கு அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி சுமார் 1100 ரேஷன் கார்டுகள் உள்ளது.
இந்த கிராமத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு தனியாகவும், மற்ற சமூகத்தினருக்கு தனியாகவும் இரு ரேஷன் கடைகள் உள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் ஒட்டுமொத்த கிராமமும் கடும் பாதிப்பிற்கு உள்ளானது.
பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களும், மற்ற சமூகத்தினரும் தாங்கள் வசித்து வரும் பகுதியில் இருக்கும் பொருட்களை வைத்து தனிதனியாக தானே உணவு சமைத்து சாப்பிட்டு வந்தனர்.
மூன்று நாட்களுக்கு பிறகு தான் அதிகாரிகள் வந்து வெள்ள நிவாரண பணிகள் வழங்க அங்கு சென்றனர். இந்த நிலையில் வி.சாத்தனூரில் உள்ள இரு ரேஷன் கடைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி பை வழங்கப்பட்டது.
வெள்ளத்தில் 3 நாட்களாக பசியுடன் காத்திருந்த மக்கள் அதனை பெற்று, பையை திறந்து பார்த்தபோது, அதில் உளுத்துப் போன அரிசியைக் கண்டு மனம் வெதும்பினர்.
அந்த கிராமத்தை சேர்ந்த சந்தர் என்ற முதியவர், அந்த அரிசியை கையில் எடுத்து ஆதங்கப்பட்ட நிலையில், அப்படியே தெருவில் வீசி எறிந்தார்.
அவர், “ஸ்டாலின் கவர்மெண்ட் கொடுக்குற ரேஷன் அரிசி இப்படியா இருக்கனும்.. என்னத்துக்கு இத கொடுக்கனும்? இத எப்படி மக்கள் சாப்பிடுவாங்க?” என்று பையில் இருந்த மொத்த அரிசியையும் ரோட்டில் வீசி எறிந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அரசியலில் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை : ரகுபதி
Comments are closed.