வழக்கமான வெரைட்டி ரைஸ் வகைகளுடன், வீட்டிலுள்ள பொருட்களை வைத்து வித்தியாசமான ரெசிப்பிகளையும் செய்து அசத்தலாம். அதற்கு உதாரணம் இந்த வேர்க்கடலை ரைஸ். அனைவருக்கும் ஏற்ற இந்த ரைஸ்… தொண்டைக்குள் நைஸாக இறங்கும்.
என்ன தேவை?
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்
வறுத்த வேர்க்கடலை – அரை கப் (பொடிக்கவும்)
கொப்பரைத் துருவல் – கால் கப்
முழு உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொப்பரைத் துருவலை வாணலியில் நன்கு வறுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து தனியே எடுத்து வைக்கவும். உதிராக வடித்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும். அதில் வேர்க்கடலைப் பொடி, உளுத்தம்பருப்பு பொடி, கொப்பரைத் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, தாளித்து வைத்திருக்கும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
இதற்கு கேரட் ராய்த்தா நல்ல காம்பினேஷன்.