பட்டினப்பாக்கத்தில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு வரும் நிலையில் 366 மீன் கடைகளை ஒதுக்கும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையோர மீன் கடைகளை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்தக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் சந்தையைக் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய மீன் அங்காடி கட்டப்பட்டு வருகிறது.
இந்த நவீன மீன் அங்காடி சுற்றுச் சுவருடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 366 மீன் கடைகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு மீனவர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. மீன்களைச் சுத்தம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீன் அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்காக சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 110 கார்கள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தவும் இடம் தயாராகி வருகிறது. மீன் அங்காடிகளின் பணிகள் விரைவாக நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் மூன்று மாதங்களில் கடைகளை திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மீனவர்களுக்குக் கடைகளை ஒதுக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக மீனவர்களுடன், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்குவது தொடர்பாக மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதைச் சரிபார்த்து மீனவர்களுக்குக் கடைகளை ஒதுக்கீடு செய்யும் இறுதிக்கட்ட பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்த நவீன அங்காடி திறக்கப்பட்டுவிட்டால் மீனவர்கள் சிரமமின்றி வரும் காலங்களில் வியாபாரம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜ்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு!
படுக்கை… பாத்ரூம்…குடிநீர்… – அரசு மருத்துவமனைகள் அவலம் : பேடியின் ஆணை நிறைவேறுமா?