தமிழக அரசின் முழு ஒத்துழைப்போடு பட்டின பிரவேச நிகழ்வு நடைபெறுவதாக சூரியனார் கோயில் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட ஞானபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி பட்டின பிரவேச நிகழ்வு நடைபெறுகிறது. விழாவின் 11-ஆம் நாளில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் சுமந்து கொண்டு, 4 வீதிகளில் வலம் வருவதே பட்டினப் பிரவேச நிகழ்ச்சியாகும்.
பட்டின பிரவேச நிகழ்வில் மனிதனை மனிதன் சுமப்பதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டன. பின்னர், அவர்களை கைது செய்து அங்கு உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் , சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”காலம் காலமாக நடந்து வரும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு சில அன்பு தோழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் தமிழ் மரபு, தமிழ் இனம், மொழி, சைவத்தின் பாரம்பரிய தொன்மையான நிகழ்வு பட்டனப்பிரவேசம் நிகழ்வாகும் . இந்தத் தொன்மையான நிகழ்வை நாம் போற்றினால்தான் சிறப்பாக இருக்கும்.
தமிழக அரசின் முழு ஒத்துழைப்போடு பட்டின பிரவேச நிகழ்வு நடைபெறுகிறது” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“பாஜக முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம்”: மு.க.ஸ்டாலின்