முத்துராமலிங்க தேவர் தங்கக்கவச வழக்கு: ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு!

தமிழகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு கொடுப்பதற்கு ஓபிஎஸ் தரப்பில்  கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து செல்லும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க கோரி  எடப்பாடி பழனிசாமி தரப்பில்  திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று(அக்டோபர் 19) நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி, அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்த பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவால்  எடப்பாடி பழனிசாமி இடைக்கால  பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார.

அதிமுக தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதில் கழகத்தின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அனைத்து வங்கி கணக்குகளிலும் தற்போது வரவு செலவுகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அதிமுக தரப்பில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. அதனை பேங்க் ஆப் இந்தியா கிளையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அனுமதி கோரி வங்கி கிளையில் மனு செய்திருந்தோம்.   ஆனால் வங்கி மறுத்துவிட்டது.

எனவே அதிமுக தரப்பில் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்ல பாண்டியன் மற்றும் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்புரத்தினம் ஆகியோர் ஆஜராகினர்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தங்க கவசம் கொடுக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தங்கள் தரப்பையும் இந்த வழக்கில் மனுதாரராக   இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா தரப்பில், நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கின்றதோ அதை பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் வங்கி தரப்பிலும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, ஓபிஎஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதித்து வழக்கு விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவு பிறப்பித்தார்.

கலை.ரா

துப்பாக்கிச் சூடு: பொய் சொல்லியிருக்கிறார் எடப்பாடி-ஸ்டாலின்

500 கோடியில் 1,000 புதிய பேருந்துகள்: ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.