“ஓட்டுப் போட எப்படி ஊருக்கு போறது?” – கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்!

தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட பொதுமக்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 17, 18 ஆகிய இரண்டு தினங்களில் 10, 214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மதியம் முதல் பொதுமக்கள் பலரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அந்தவகையில், சென்னை கிளாம்பாக்கத்தில் இரவு 12 மணிக்கு மேல் திருச்சி, விழுப்புரம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இயக்கப்படவில்லை என்று கூறி போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அரசு பேருந்துகளை சிறைபிடித்தும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கூடுவாஞ்சேரி துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மாற்று பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இயந்திரங்களில் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்!

வரிசையில் நின்று வாக்களித்த ஈபிஎஸ்: அன்பை வெளிப்படுத்திய தமிழிசை… பிரேமலதா…

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *