மதுராந்தகம் அருகே விபத்து ஏற்பட்டதன் காரணமாக, கிளம்பாக்கத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல நேற்று இரவு தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் திறக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னும் போதுமான இணைப்பு பேருந்துகள் இல்லை, சொந்த ஊர்களுக்கு செல்ல தொலை தூர பேருந்துகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தநிலையில், நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் திடீரென அரசு பேருந்தை சிறை பிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், அப்படி வரும் ஒன்று, இரண்டு பேருந்துகளில் ஏற்கனவே இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக நடத்துநர்கள் கூறுவதாகவும் புகார் கூறும் பயணிகள், பேருந்துகளுக்கு முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஓட்டுநர் – நடத்துநர்கள் மற்றும் பேருந்துகளுக்காக காத்திருந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூரைச் சேர்ந்த பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “10 மணிக்கு கிளாம்பாக்கம் வந்தேன். மணி காலை 3.15 ஆகிறது. இன்னும் பேருந்து கிடைக்கவில்லை. வருகிற ஒரு சில பேருந்துகளிலும் ஏற்கனவே கூட்டம் அலைமோதுகிறது.
எங்கிருந்து ஏற்றி வருகிறார்கள் என தெரியவில்லை. இங்கு பல நூற்றுக் கணக்கானோர் காத்திருக்கிறோம். அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் கேட்டால், விபத்து நடந்துள்ளது, பேருந்து வரும் என்கிறார்கள். ஒரு சிலர் பேருந்து வந்தால் ஓடிப்போய் ஏறிகொள்ளுங்கள் என அலட்சியமக சொல்கிறார்கள்.
சனி, ஞாயிறு விடுமுறை தினத்துக்கு அதிகம் பேர் ஊருக்கு போவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா? புதியதாக பேருந்து நிலையத்தை கட்டினால் மட்டும் போதுமா, மக்கள் சிரமமின்றி பயணிக்க போதுமான பேருந்துகளை இயக்க வேண்டுமல்லவா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று இரவு கிளாம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் போக்குவரத்து துறை தரப்பில் கேட்டபோது, “வழக்கமாக திருச்சிக்கு இயக்கப்படும் 105 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டன.
மதுராந்தகம் அருகே நடந்த விபத்து காரணமாக கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் வர தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் வந்த பின்னர் நிலைமை சீரானது. அதைத்தவிர கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பிரச்சினை கிடையாது” என்று விளக்கமளித்தனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் வேட்டி, சேலை ஊழல் குறித்து விஜிலென்ஸில் புகார்: அண்ணாமலை
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு!