எங்களுக்கு மட்டும் விடியல் இல்லையா? பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்!

தமிழகம்

தேர்தலுக்கு முன்பாக பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வேன் என வாக்குறுதி கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது முதல்வராகிவிட்டார். ஆனாலும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மௌனம் காப்பது வேதனை தருவதாக அரசு பள்ளியில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று (செப்டம்பர் 10) ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “அரசுக்குக் கடுமையான நிதிப் பற்றாக்குறை இருப்பதால், நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்திருந்தார் என நீங்களே அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் அளிக்க வேண்டிய விளக்கத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் அதிகமான எதிர்பார்ப்போடு வந்திருப்பீர்கள். நானும் உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன்.

நான் அளித்த வாக்குறுதிகளை மறுக்கவில்லை, மறைக்கவில்லை, மறக்கவும் இல்லை” என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்,

“அனைத்து வகையான தற்காலிக பகுதி நேர பணியில் இருக்கும் ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்,

“ஜாக்டோஜியோ மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக 181வது வாக்குறுதியை நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து அறிவிப்பார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு 60 வயது வரை பணியாற்றவும், பணி மாறுதலும் வழங்குவதாக மட்டுமே அறிவித்தார்.

பணிநிரந்தரம் செய்தாலே இதெல்லாமே கிடைத்துவிடும்.

இன்னும் பணிநிரந்தரம் செய்வதற்கான வழிமுறையை செய்யாமல், தற்போதைய பகுதிநேர பணியை நீட்டித்து முழுநேரம் ஆக்காமல், அனைத்து வேலைநாளும் பணியாற்ற வாய்ப்பு வழங்காமல், எங்களை இப்படியே வைத்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது.

அதிமுக ஆட்சியில் 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட ₹10ஆயிரம் சம்பளத்தையே, திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகியும் உயர்த்தாமல் இருப்பதும் நியாயமா?

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி கொடுக்கும்போது, எங்களை போல் தொகுப்பூதியத்தில் உள்ளவர்கள் நிலை என்னாவது?

இது சமநீதி இல்லை. 11ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாதவரை, அரசின் பண பலன்கள் கிடைக்காமல் வேடிக்கை பார்த்தே தான் சாகவேண்டும் என்ற நிலையில் தள்ளப்படுகிறோம்.

விடியல் தருகிறோமென சொல்லிட்டு, இன்னும் நாங்கள் இருட்டிலே தவிப்பதை முதல்வரே இனியாவது மாற்றுங்கள். கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவேன் இந்த ஸ்டாலின் என நம்பிக்கை கொடுத்ததால், இந்த 16 மாதத்தில் பலமுறை மனுக்களை கொடுத்தோம்.

உங்களிடம் கொடுத்த மனுக்களுக்கு, வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளிலாவது பணிநிரந்தரம் என்ற நல்ல செய்தியை கொடுங்கள் முதல்வரே” என்று தெரிவித்துள்ளார் செந்தில்குமார்.

-வேந்தன்

ஜாக்டோ – ஜியோ மாநாட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *