பாரிமுனை கட்டட விபத்து மீட்புப் பணிக்காகத் தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் அரண்மனை பகுதி 4வது தெருவில் உள்ள பழமையான 4 மாடி கட்டடத்தில் கடந்த 2 மாதங்களாக புதுப்பித்தல் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 19) காலை 10 மணியளவில் அந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கட்டட இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியினை தீவிரப்படுத்தினர்.
ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் 10 மருத்துவ குழுவுடன் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.
தற்போது 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, “கட்டிடத்திற்குள் புதுப்பித்தல் பணி நடைபெற்றதால், மாநகராட்சியிடம் அனுமதி வாங்கவில்லை. இந்த தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
காவல் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினர், இணைந்து பணியாற்றி வருகின்றனர். இடிபாடுகளுக்குள் ஊழியர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தான் மீட்புப் பணியை மேற்கொள்ள முடியும்.
உள்ளே சிக்கியுள்ள ஊழியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்குத் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.
இந்த கட்டட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மோனிஷா
தமிழ்நாட்டின் நிதி நிலை : முன்னாள் தலைமைச் செயலாளரின் ஆலோசனைகள்!
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை மிரட்டிய நடத்துநர் சஸ்பெண்ட்!