புதுச்சேரியில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தியதோடு, பெற்றோர்கள் பள்ளிக்குப் பூட்டு போட்டுவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் கண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட தேத்தம்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் போதிய மின் வசதி, கழிப்பிட வசதி, தரமான குடிநீர் ஆகியவை இல்லை என மாணவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும் மழைக் காலங்களின்போது பள்ளிக்குள் நீர்க்கசிவு இருப்பதால் மாணவர்கள் அமர்ந்து பாடங்களை பயில முடியாத நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இது தொடர்பாக பெற்றோர் தரப்பில் கல்வித் துறைக்கு பலமுறை புகார்கள் அளிக்கப்படும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும், அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு பள்ளியை மாற்றுவதாக கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி அளித்து இருந்தது.
ஆனால், அந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே பணம் வசூல் செய்து சமுதாய நலக்கூடத்தை பள்ளிக்கூடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று (ஜூன் 19) காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்புகளை புறக்கணித்த அவர்கள் அருகிலுள்ள கலையரங்கத்தில் அமர்ந்தபடி கல்வித்துறையைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே அங்கு வந்த பெற்றோர்கள் சிலர் மாணவர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் பள்ளிக்கு பூட்டு போட்டுவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: அக்குள் பகுதியில் கரும்படலம்… ஆயின்மென்ட் உதவுமா?
டாப் 10 நியூஸ் : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் இந்தியா – ஆப்கான் போட்டி வரை!