குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது: அமைச்சர் கீதாஜீவன்

Published On:

| By Minnambalam

குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டிய முக்கியமான கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது. பள்ளிக்குச் சென்று குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிய வேண்டும். குழந்தைகள் எங்கு போகிறார்கள், யாருடன் விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு தனியார் ஹோட்டலில் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு பிரிவின் கீழ் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு பேசினார்.
அப்போது, “தமிழக முதலமைச்சர் பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்ய ஒரு திட்டம் உள்ளது. பல்வேறு பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கமாகும். பஞ்சாயத்து தலைவர்கள் தங்களுடைய பணிகளுடன் இதனையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை பார்க்க வேண்டிய முக்கியமான கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு சென்று குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிய வேண்டும். குழந்தைகள் எங்கு போகிறார்கள், யாருடன் விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
தற்போது 1098 எண்ணுக்கு அதிக புகார்கள் வருகின்றன. குழந்தைகளை கட்டுப்பாடுடன் வளர்க்க வேண்டும். தொடர்ச்சியான சமுதாய மாற்றம் ஏற்பட்டால்தான் வெற்றியடைய முடியும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். வளர் இளம் பருவத்தில் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்” என்று பேசினார்.
மேலும்,  “அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 2.81 லட்சம் பேர் உயர்கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவு வந்தால் இன்னும் அதிகமாகும். யுனிசெப் நிறுவனம் நமது பகுதியில் சிறார்கள் குற்ற செயல்கள் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. நமது மாவட்டத்தில் 21ஆம் தேதி யுனிசெப், மாவட்டநிர்வாகம், சமூகநலத் துறை இணைந்து ஓராண்டு செயல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்றும் கூறினார்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share