தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் பார்சல் சேவை அறிமுகமாகிறது.
விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்ப லாரி, மினி வேன் போன்ற போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இது பல ஊர்களுக்கு பயணித்து பார்சல் சென்று அடைய வேண்டிய பகுதிக்கு செல்வதால், சில நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது.
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 1,110 விரைவுப் பேருந்துகளில் பயணிப்போரின் பொருட்களை வைக்க பேருந்தின் பக்கவாட்டில் 2 சுமைப் பெட்டிகளும், பேருந்திற்கு பின்னால் ஒரு சுமைப் பெட்டியும் இருக்கிறது.
இந்த பெட்டிகளை இன்று முதல் (ஆகஸ்ட் 3) நாள் மற்றும் மாதம் அடிப்படையில் வாடகைக்கு விடப்போவதாக போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன்மூலம் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்களது பார்சல்களை பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு சுலபமாக அனுப்பி வைக்க முடியும்.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய 7 நகரங்களில் இத்திட்டம் முதற்கட்டமாக தொடங்கவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெகு தூரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பார்சல் கூட ஒரே நாளில் சென்னையை வந்து சேர்ந்துவிடும். அல்லது சென்னையில் இருந்தும் ஒரே நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றடையும்.
கட்டணம் எவ்வளவு?
இதற்கு கட்டணமாக ரூ.200 முதல் ரூ. 400 வரை சேவை கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 80 கிலோ எடை வரை உள்ள பார்சல்களுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ. 390 வசூலிக்கப்படும் எனவும், மாத வாடகை அடிப்படையில் பார்சல் அனுப்புபவர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பேருந்தில் எந்தெந்த தேதிகளில் பார்சல் அனுப்புகிறீர்களோ அதனை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் பார்சல் சேவைக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த சேவை திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு நேரமும், செலவும் குறையும். பொருட்களும் விரைவாக அனுப்பி வைக்கப்படும் இடங்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்தில் பார்சல் சேவைக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோரியர் சேவை…
பார்சல் சேவை குறித்த விவரங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் கேட்டுப் பெற்று கொள்ளலாம் எனவும், பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் விரைவுப் பேருந்துகளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பேருந்துகளில் கோரியர் அனுப்பும் திட்டமும் அறிமுகப்படுத்தபட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளனர்.
மோனிஷா