பரங்கிமலையில் ரயில் முன் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஏற்கனவே மகளை இழந்து வாடும் சோகத்திலிருந்த குடும்பத்தினருக்குத் தந்தை மரணம் மேலும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்சி ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி(43). ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியினரின் மகள் சத்யா.
இவரை ஆதம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வந்த சதீஷ் காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது பரங்கிமலை நோக்கி மின்சார ரயில் வந்த நிலையில், தண்டவாளத்தில் சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டார். இதில் சத்யா ரயில் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. சதீஷைப் பிடிக்க ரயில்வே போலீஸ் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு சதீஷை கைது செய்தனர்.
அதே நேரத்தில் தலைமைக் காவலர் ராமலட்சுமியின் கணவர் மாணிக்கம் மகள் இறந்த சோகத்தில் வீட்டின் முன்பாக காரிலே அமர்ந்து இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சைதாப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.
மகள் சத்யா உடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது.
மகள் இறந்து ஒரு நாள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது குடும்பத்தினரிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா