பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு பேரணி – போலீசார் குவிப்பு!

தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் பேரணி செல்ல திரண்டுள்ளதால் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13கிராமப் பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெல்வாய், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 145நாட்களாக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதனால் போராட்டக்குழுவினருடன் நேற்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கிராம போராட்டக் குழுவைச் சேர்ந்த இளங்கோ தெரிவித்திருந்தார்.

அதன்படி 146ஆவது நாளான இன்று(டிசம்பர் 19) காலை 13கிராமங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வாயில் கருப்புத் துணி அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல ஏகனாதபுரம் அம்பேத்கர் சிலை முன்பு குவிந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், “தமிழகத்தில் அனைத்து இடத்திலும் விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் என்று முதல்வர் தெரிவித்தார். கோவை அன்னூர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தமாட்டோம் என்று கூறினார். அதுபோன்று பரந்தூர் பகுதி விவசாய நிலங்களையும் கையகப்படுத்தமாட்டார் என்று நம்புகிறோம்” என்றனர்.

கிராம மக்களின் பேரணியைத் தொடர்ந்து அங்கு 1000போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களில் 10பேர் மட்டும் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நாளை தலைமைச் செயலகத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து போராட்டக்காரர்கள் மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரியா

பெனால்டி ஷூட் அவுட்: மாஸ் காட்டிய எமிலியானோ மார்டினஸ்

ஒளிவீசிய பார்வையற்ற மாடல்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *