பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்வதற்காக டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சென்னை 2வது பெரிய விமான நிலையம் மற்றும் பசுமைவெளி விமான நிலையத்திற்காக முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த புதிய விமான நிலையம் மூலம், பல விவசாயிகள் தங்களது விளைநிலங்களையும், வீடுகளையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிய விமான நிலையம் வருவதற்கு பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு பக்கம் விமான நிலையத்திற்கான டெண்டர் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியைக் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாடு இண்டஸ்டிரியல் டெவலப்மெண்ட கார்ப்பரேஷன் – டிட்கோ அறிவித்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க டிட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் டிட்கோ அறிவித்துள்ளது.
ஜனவரி 6 ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காகக் கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது. ஜனவரி 6 ஆம் தேதியோடு கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 27 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது.
விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டுப் பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானது.
கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதைப் பொறுத்து, அது தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
`அப்பா அம்மா செய்த புண்ணியம்`: இளையராஜா பற்றி சூரி
அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!