பரந்தூர் விமான நிலையம் : கிராம மக்களிடம் கருத்து கேட்கும் அன்புமணி
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு பணிகளில் பாதிக்கப்படும் மக்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை (ஆகஸ்ட் 25) கருத்து கேட்க உள்ளார்.
சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது.
மொத்தம் 4800 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
அதனால், பரந்தூர் பகுதி மக்களிடம் ஒரு வித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் நிலங்களை பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அவர்களின் அச்சத்தைப் போக்கி, பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாமக நாளை நடத்துகிறது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் நாளை (25.08.2022) காலை 10.00 மணிக்கு இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
அன்புமணி ராமதாஸ் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள அனைத்து கிராம மக்களிடமும் கருத்துகளை கேட்டறிய உள்ளார்.
செல்வம்
‘வாழ்வாதாரம் பாதிக்கும்’: பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!