பரம்பிக்குளம் அணையில் உடைப்பு: கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகம்

பரம்பிக்குளம் அணையில் ஏற்பட்ட உடைப்பால் கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரி பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன.

இந்த பி.ஏ.பி திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டி.எம்.சியும் நீர் பகிர்மானம் செய்துகொள்ள வேண்டும்.

பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள 9 அணைகளில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது.

இந்த அணை 72 அடி உயரம் கொண்டது. இது, 17 டி.எம்.சிக்கும் அதிகமாக நீர்பிடிப்பு கொண்டது. இந்த அணையை தமிழக அரசுதான் பராமரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு பெய்து வரும் தொடர் மழையால், பி.ஏ.பி. யில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி இருந்தன. பரம்பிக்குளம் அணையிலும் 70 அடிக்கு தண்ணீர் நிரம்பியிருந்தது.

பரம்பிக்குளம் அணையில் இருந்து தமிழகத்திற்கு சுரங்கங்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த அணையில் இருந்து அவசரகாலங்களில் தண்ணீரை வெளியேற்றுவதற்காகவும், உபரிநீரை வெளியேற்றுவதற்காகவும் முக்கியமாக 3 ஷட்டர்கள் உள்ளன.

இந்த ஷட்டர்கள் திறக்கப்பட்டால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வனப்பகுதி வழியாக கேரளாவை சென்றடையும். இந்த 3 மதகுகளில் நடுவில் உள்ள மதகில் இன்று அதிகாலை உடைப்பு ஏற்பட்டது.

இதனால் 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக பி.ஏ.பி. முக்கிய அதிகாரிகள் மற்றும் கேரள நீர் பாசன துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளா பொதுத்துறை அதிகாரிகளும் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?

நாயை காரில் கட்டி இழுத்து சென்ற மருத்துவர் – கொந்தளித்த மக்கள்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *