சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியுள்ள ராஜ்பவன் மாளிகையில் ஆளில்லாத வானூர்தி ஒன்று இறங்கிவிட்டதாக கிளம்பிய தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பிலிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று (டிசம்பர் 17) இரவு தகவல் கொடுக்க ஒட்டுமொத்த பாதுகாப்பு அதிகாரிகளும் ராஜ்பவனுக்குள் இறங்கி விட்டனர்.
இந்த சம்பவம் சென்னை மாநகர போலீசார் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திவிட்டது.
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தங்கியுள்ள ராஜ்பவன் மாளிகையில் நேற்று டிசம்பர் 17ஆம் தேதி இரவு சுமார் 8.00 மணியளவில் ரவி வசிக்கும் கட்டிடத்தின் பின் புறத்தில் ட்ரோன் போன்ற வடிவத்தில் ஒரு பொருள் கீழே விழுந்துள்ளது.
அதைப் பார்த்த சிஆர்பிஎஃப் போலீசார் ஒருவர் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்குப் பதட்டத்துடன் தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். தமிழக காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததும் செக்யூரிட்டி பிரிவிலிருந்து ஒரு டீம் பறந்து வந்து மெட்டல் டிடெக்டர்கள், மோப்ப நாய்கள் சகிதம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
தகவல் கொடுத்த சிஆர்பிஎஃப் போலீசிடம் விசாரித்தனர். அவர், ’ரெட் லைட் எரிந்தபடி ஒரு ட்ரோன் வந்து கீழே விழுந்ததைப் பார்த்தேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
பாதுகாப்புத் துறையோடு உளவுத் துறையும் தீவிர விசாரணையில் இறங்கியது.
கீழே விழுந்த அந்த பொருளை பலத்த சோதனைக்குப் பிறகு கைப்பற்றி ஆராய்ந்தபோதுதான்,
’அது ட்ரோன் இல்லை, ஒன்றரை அடி உயரத்தில் உள்ள பாராசூட் ’என்று தெரிந்தது. இதனால் போலீஸார் மேலும் குழம்பிப் போனார்கள்.
பாராசூட் இங்கே வந்து இறங்கவேண்டிய காரணம் என்ன, பாராசூட் எங்கிருந்து வந்தது என விசாரணையில் இறங்கிய போதுதான் உண்மை தெரிந்தது.
மீனம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பருவ மழை சீசன்களில் வானிலை பற்றிய ஆய்வுக்காக தினமும் இரண்டு அல்லது மூன்று பாராசூட்டுகளை ஆய்வுக்காகப் பறக்க விடுவார்கள்.
அந்த பாராசூட்டுகள் திரும்ப வராது. அது போன்ற பாராசூட்கள் பலமுறை ராஜ்பவன் மற்றும் ஐஐடி பகுதியில் விழுந்துள்ளன. நேற்று பாதுகாப்பிலிருந்த போலீஸ், பணிக்கு புதியவர் என்பதால் பாராசூட் பறந்து வந்ததைப் பார்த்து ஆளில்லா விமானம் என்று பதறிப்போய் தகவல் கொடுத்துவிட்டார்.
சிட்டி போலீசாரும் பரபரப்பாகிவிட்டார்கள். ஆளுநர் முதல் முதல்வர் வரையில் இதனால் டென்ஷனாகி விட்டார்கள்.
பிறகு விசாரணையில்தான் வானிலை பாராசூட் என்ற தகவல் கண்டுபிடிக்கப்பட்டு ஆளுநருக்கும் முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரிலாக்ஸ் ஆனார்கள் என்கிறார்கள் ராஜ்பவன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்.
–வணங்காமுடி
வாட்ச் விவகாரம்: சொத்து விவரங்களை வெளியிட தயார் – அண்ணாமலை
இந்தியாவின் சுழற்பந்தில் சுழன்ற வங்கதேசம்