பண்ருட்டி கூலி தொழிலாளி சக்திவேல் கொலை வழக்கில் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 22) தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பயில்வான் என்கிற சக்திவேல். இவர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் செர எடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த மே 17ஆம் தேதி கீழக்குப்பம் அய்யனார் கோயில் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார் சக்திவேல். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரும் சக்திவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே, ஞானகுருவும் ராஜசேகரும் அங்கிருந்த முந்திரி கட்டையால் சக்திவேலைக் கடுமையாக தாக்கினர்.
ஊர் மக்கள் சக்திவேலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி உட்கோட்டம் டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மே 17 அன்று மாலை 6.30 மணிக்கு கொலை நடைபெற்றது.
மே 17ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புகார் பெறப்பட்டு, நள்ளிரவு 12.00 மணியளவில் எஃப்ஐஆர் (குற்ற எண்132/2023) பதியப்பட்டது.
தொடர்ந்து, மே 18 காலை 5.30 மணிக்கு விசாரணையைத் துவங்கிய போலீசார், 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பண்ருட்டி ஜே.எம். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
அதாவது சம்பவம் நடைபெற்ற 46 மணி நேரத்தில் டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கடந்த ஜூன் 2-ஆம் தேதி கொலை: இரண்டே நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த வழக்கானது கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி பிரகாஷ், “சக்திவேல் கொலை வழக்கில் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரும் குற்றவாளிகள். தண்டனை விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நீக்கப்பட்ட பெயர் பலகை: ஸ்டாலினை சந்தித்த பொன்முடி
ஊழல் குற்றவாளி: உடைந்துபோன திமுகவின் கேடயம்!