வட இந்தியர்களின் பிடித்த உணவு வகையான புலாவ் இன்று தென்னிந்தியர்களின் பேவரைட் உணவாகிவிட்டது. குறிப்பாக வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாகவும் திகழ்கிறது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் இந்த பனீர் புலாவ் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
என்ன தேவை?
பாஸ்மதி அரிசி – ஒரு கப், பனீர் – அரை கப், பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தயிர் – 2 டீஸ்பூன் அல்லது எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குக்கரை அடுப்பில்வைத்து, எண்ணெய், நெய் ஊற்றிக் காயவிட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி போட்டு நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, அரை டீஸ்பூன் உப்பு, தயிர் (அல்லது) எலுமிச்சைச் சாறு எல்லாம் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, அது தளதளவென்று கொதிக்கும்போது, அரிசியையும் பனீரையும் போட்டுக் கிளறவும். குக்கரை மூடி, வெயிட் போட்டு, ஒரு விசில் வந்ததும், `சிம்’மில்வைத்து ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
உதிர் உதிராய் கமகம பனீர் புலாவ் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…