மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் வகைகளை எதிர்பார்ப்பார்கள். உங்கள் வீட்டில் பனீர் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான இந்த பனீர் பாப்பர்ஸ் செய்யலாம். இது மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளின் பசியை ஆற்றும். மேலும் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கும்போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டையும் பெறலாம்.
என்ன தேவை?
பனீர் – 200 கிராம் (துருவவும்)
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மைதா – 4 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளேக்ஸ் – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
துருவிய பனீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, மைதா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைக் கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.
பின்பு, கார்ன்ஃப்ளார், மீதமுள்ள மைதா, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து, உருண்டைகளை இதில் தோய்த்து நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.