வாரத்தில் ஒருநாள் வாய்க்கு ருசியாகச் சாப்பிடவும் வேண்டும்…. ஆரோக்கியத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்… என்னதான் செய்வது? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரே வேலையில் இரண்டு விஷயங்களையும் செய்ய முடியும். அதற்கு எளிதாகச் செய்யக்கூடிய புரதச்சத்து மிகுந்த இந்த பனீர் பாயசம் உதவும். ருசியும் அபாரம், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்.
என்ன தேவை?
பனீர் – 100 கிராம்
பால் – 500 மில்லி
சர்க்கரை – 150 கிராம்
ஏலக்காய்த்தூள் – 8
முந்திரி – 10
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – 10
நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
பேரீச்சை – 30 கிராம்
பிஸ்தா – 2
பாதாம் பருப்பு – 3
எப்படிச் செய்வது?
பனீர் மற்றும் பேரீச்சை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பாலை ஊற்றி நன்றாக காய்ச்சிக்கொள்ளவும், இதில் நறுக்கிய பனீர், பேரீச்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சவும். பேரீச்சை நன்கு வெந்த பிறகு வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கவும். ஒரு பவுலில் பாயசத்தை ஊற்றி பாதாம், பிஸ்தாவைப் பொடியாக்கிச் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: பனீர் பாயசத்தை ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.