‘பசிக்கு உணவு’ என்பது போய், ‘நல்ல ருசியோடு இருக்கிறதா… எவ்வளவு கலோரி இருக்கும்… சத்துமிக்கதா, ஜீரணமாகுமா’ என்றெல்லாம் சிந்திப்பது சமீபத்திய டிரெண்ட். இதையெல்லாம் கருத்தில் கொண்டு வீட்டிலேயே இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷலாக இந்த பனீர் பசந்தா செய்து அசத்தலாம்.
என்ன தேவை? Paneer Pasanda Recipe in Tamil
பசலைக்கீரை – ஒரு கட்டு
பனீர் – 200 கிராம்
வெங்காயம் – கால் கப் (நறுக்கியது)
தக்காளி – 2
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
கிரீம் – 2 டீஸ்பூன்
தயிர் – கால் கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பசலைக்கீரையை வெந்நீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்து, அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இத்துடன் சிறிது கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பனீரை சதுரம் சதுரமாக வெட்டி, அதன் நடுவில் அரைத்த கீரையை வைத்து ஒட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், சிறிது கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி… தயிர், கிரீம், உப்பு சேர்த்துக் கிளறவும். சிறிதளவு தண்ணீர், பொரித்த பனீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் இறக்கிப் பரிமாறவும்.