1999இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குர்குரே, இன்று குழந்தைகளின் விருப்ப உணவாகிவிட்டது. காற்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் குர்குரே வகைகள் அநேகம். இப்படிப்பட்ட குர்குரேவை வீட்டிலேயே செய்து அசத்தலாம். அதற்கு இந்த பனீர் குர்குரே பெஸ்ட் சாய்ஸ்.
என்ன தேவை?
பனீர் – 100 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பனீரை 2 அங்குலம் அளவுள்ள நீளத் துண்டுகளாக கட் செய்யவும். எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் பனீருடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி எலுமிச்சைச்சாறுவிட்டுக் கலந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும், பனீரை இரண்டு இரண்டாகச் சேர்த்துப் பொரித்தெடுத்தால், பனீர் ‘குர்குரே’ தயார்.
குறிப்பு: கலவை கலக்கும்போது தண்ணீர் அதிகமாகச் சேர்த்தால், பனீரில் கலவை ஒட்டாது. பேஸ்ட் போல ஒட்டுமளவுக்குத் தண்ணீர் சேர்த்தால் போதும்.