சாமி துரை என்பவர் கொலை வழக்கில், பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவை இன்று (அக்டோபர் 7) திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள மஞ்சங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், நெல்லை மாவட்டம் நடுநந்தன்குளத்தை சேர்ந்த விக்டர், கோதேசேரியை சேர்ந்த முருகேசன் என்ற இருவரையும் போலீசார் கைது செய்திருந்தனர். போலீசார் விசாரணையில், ராக்கெட் ராஜா இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில், ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை மாவட்ட நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.
ராக்கெட் ராஜா மும்பையில் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ராக்கெட் ராஜா மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
செல்வம்
திமுகவில் திடீர் அதிசயம்: பாயும் பணம்! இதோ பட்டியல்!
சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!