பாம்பன் கோவில் குடமுழுக்கு: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By indhu

திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவில் குடமுழுக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மயூரபுரம் குரு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் அன்னதான சபையின் தலைவர் டி.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “எங்களது சபை கடந்த 1999ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் அன்னதானம் செய்து, பாம்பன் சுவாமிகளின் சிந்தனை மற்றும் நம்பிக்கையை வளர்த்து வருகிறது.

பாம்பன் சுவாமிக்கு கடந்த 1929ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை குப்புசாமி செட்டியார் தலைமையிலான சபை பூஜைகளை செய்து வந்தது. பிறகு, இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணையின்போது, இந்த கோவிலில் பூஜை செய்ய மேலும் பல சபைகள் உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை வாதிட்டது.

இந்நிலையில், பாம்பன் சுவாமி சமாதியை வளைத்து கோவில் போல் உருவாக்கி, அங்கு ஜூலை 12ஆம் தேதி குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகள் மீறப்பட்டுள்ளன. எனவே, பாம்பன் சுவாமி கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று டி.சரவணன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (ஜூலை 4) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, “பாம்பன் கோவில் குடமுழுக்கிற்கு தடை விதிக்க முடியாது. இந்த குடமுழுக்கில் மனுதாரர் கலந்து கொள்ளலாம். ஆனால், இதற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.

குடமுழுக்கு முடிந்து 2 வார காலத்திற்குப் பிறகு தன் கோரிக்கை குறித்து மனுதாரர் அறநிலையத்துறையிடம் மனு கொடுக்க வேண்டும். அந்த வகையில், வரும் ஜூலை 24ஆம் தேதி மனுதாரர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவரது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறலாம்.

மேலும், 6 மாதத்திற்குள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து உரிய உத்தரவை இந்துசமய அறநிலையத்துறை பிறப்பிக்க வேண்டும். பாம்பன் கோவில் குடமுழுக்கின்போது ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், காவல்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ’குடமுழுக்கு விழாவில் இடையூறு ஏற்படுத்த மாட்டேன்’ என்று மனுதாரர் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’கவுண்டம்பாளையம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு : நடிகர் ரஞ்சித் வேதனையுடன் புகார்!

எனக்கு திருமணமா? – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவேதா தாமஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share