கடலூரில் பனை மரங்களை வெட்டியவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூரில், சேலம் சாலைப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் 68பனை மரங்கள் மர்மநபர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்டஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டதன் பேரில், வேப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், ’சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது’ என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கூடுதல் மரங்கள் நட வேண்டும்
இதுகுறித்து அவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பதிவில், “மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதன் நோக்கம் மரங்களை திருடுவது அல்ல. அதைவிட தீயநோக்கம் கொண்டதாகும்.
நெடுஞ்சாலையை ஒட்டிய நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக ஒரு நிலவணிக நிறுவனம்தான் அதிகாரிகளின் துணையுடன் பனைமரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளது.
மரங்கள் வெட்டப்பட்டால் அதையொட்டி ஓடும் ஓடையை மூடி நிலத்தை நெடுஞ்சாலையுடன் இணைத்து விடலாம்; ஓடையை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டலாம் என்பதுதான் நிலவணிக நிறுவனத்தின் நோக்கம். அதை அனுமதிக்கக்கூடாது. அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர வேண்டும்.
நெடுஞ்சாலையோரம் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதைவிட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும்.
அவற்றை வளர்ப்பதற்கான பராமரிப்பு செலவுகளை சம்பந்தப்பட்ட நிலவணிக நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழகத்தின் மரமான பனை மரங்களை பாதுகாக்கும் வகையில், கடந்த 2021ஆம்ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
’பனை மரங்களை வெட்ட தடை விதித்து, மிக அவசியமான தேவை எனில் ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்ற பின்னரே பனை மரங்கள் வெட்ட வேண்டும்’ என சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்
தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை வழங்கிய முதல்வர்