பல்லடம் கொலை…  துப்பாக்கியால் சுட்ட டி.எஸ்.பி. சவுமியா: பாராட்டும் மக்கள்- கேள்வி கேட்கும் உயரதிகாரிகள்

Published On:

| By Aara

தென் மாவட்டம், மேற்கு மாவட்டம், வட மாவட்டம் என பாகுபாடு இல்லாமல் தமிழ்நாட்டில் கொத்துக் கொத்தாய் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.  எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கொலைகளை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில்,  மக்களிடையேயும்  ஆங்காங்கே பயம் அப்பிக் கிடக்கிறது.

இந்த நிலையில்தான்  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக் கிணறு பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(49), அவரது சகோதரர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68), சித்தி ரத்தினாம்பாள்(59) ஆகிய நால்வரை கடந்த 3-ம் தேதி மாலை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். அவர்கள் வீடு அருகே மது குடித்துக் கொண்டிருந்ததை தட்டிக் கேட்டதாலும் முன் விரோதத்தின் அடிப்படையிலும் நடந்த இந்த கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்தக் கொலைகளில்  திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார்(27), திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து(24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா(22)  ஆகியோர் ஈடுபட்டதைக் கண்டறிந்த போலீஸார் முதலில் செல்லமுத்துவைக் கைது செய்தனர். அதன் பின்   திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் சரண்டைந்தனர். இந்த நான்கு கொலைகள் பற்றி எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக கண்டித்தனர்.

அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றதால்,   இந்த வழக்கை விரைவில் துப்பு துலக்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து திருப்பூர் மாவட்ட போலீஸாருக்கு உத்தரவு பறந்தது. இந்த நிலையில்தான் முக்கிய குற்றவாளியை பிடித்து விசாரணை செய்தபோது, தப்பி ஓட முயன்றவரை இரண்டு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார் டி.எஸ்.பி. சவுமியா.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் வட்டாரங்களில் பேசினோம்.

“மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி பல்லடம் டிஎஸ்பி சவுமியாவிடம்  இந்த கொலை வழக்கு பற்றி  என்னாச்சு என்னாச்சு என்று அடிக்கடி விசாரித்தார். உடனடியாக குற்றவாளிகளை ஃபிக்ஸ் பண்ணுங்க, அரெஸ்ட் பண்ணுங்க என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார் டிஎஸ்பி சவுமியா. ‘இது  திட்டமிட்ட கொலை.  அவசரப்பட்டு போலியான  நபர்களை  ஃபிக்ஸ் பண்ணிவிட முடியாது.  பின்னணி என்ன, யார் எதற்காக கொலை செய்தனர் என்று உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கொஞ்சம் டயம் வேண்டும்’ என்று மேலதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்து விசாரணையில் தீவிரம் காட்டினார்.

இந்த நிலையில்தான்  வெங்கடேஷ் என்பவரை பிடித்து விசாரித்தார்.  அவரிடம் ஸ்பெஷல் விசாரணை செய்த டிஎஸ்பி கொலைக்கு பயன்படுத்திய  ஆயுதங்களைக் கைப்பற்ற  அருகிலுள்ள இடத்திற்கு அழைத்து சென்றனர்.  அங்கே ஆயுதங்களைக் கைப்பற்றிவிட்டுத் திரும்பும்போது கொட்டம்பட்டி அருகே  போலீஸை தாக்கிவிட்டு தப்பி ஓடினார் வெங்கடேஷ். அப்போது சாமர்த்தியமாக  அவரது கால்களில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார் டி.எஸ்.பி. சவுமியா.

டி.எஸ்.பி.யின் இந்த செய்கை அப்பகுதி மக்களால் வரவேற்கப்படுகிறது. ஆனால் உயரதிகாரிகளோ  இப்படி திறமையாக பிடித்த டிஎஸ்பியை பாராட்டாமல்  டிஎஸ்பி சவுமியாவை, ‘ஏன் துப்பாக்கியைப் பயன்படுத்தினீர்கள்?’ என்று  வார்த்தையால் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் டென்ஷனான டிஎஸ்பி சவுமியா யார் போனையும் எடுக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்” என்கிறார்கள்  காவல் துறையினர்.

யார் இந்த டிஎஸ்பி சவுமியா?

தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்தவர் சவுமியா.  2020 பேட்ஜில்  டி.எஸ்.பி. ஆனவர்.  இவரது பேட்ஜில் 85 பேர் அதில் பெண்கள் 40 பேர்.  அந்த 40 பேரில்  ஒருவர்தான் சவுமியா. இந்த 85 பேரில் சவுமியா மட்டும் அனைத்து பயிற்சியிலும் திறமையாக முதலிடத்தை பிடித்து வந்தவர், ஒரு வேலை என்றால் அதை முடிக்காமல் விடமாட்டார் என்று பெயரெடுத்தார்.  துப்பாக்கி சுடுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்.  சவுமியா  பயிற்சி டிஎஸ்பியாக பணியாற்றிய இடம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி. அதன் பிறகு  திருப்பூர் மாவட்டம் பல்லடம் டிஎஸ்பியாக நியமித்ததிலிருந்து ஆக்டிவாக செயல்பட்டு வந்தார்.

இப்படி துப்பாக்கி சுடுதலில் தேர்ந்தவரான  சவுமியா அந்த குற்றவாளியின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் அவனை சுட்டுப் பிடித்துள்ளார். ஆனால் உயரதிகாரிகளோ, இதைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள் என்று திருப்பூர் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்புகள் எழுந்துள்ளன.

வணங்காமுடி

விஜயின் அரசியல்: வடிவேலு கிண்டல்!

1000ஆவது குடமுழுக்கு விழா கோலாகலம்: முதல்வர் பெருமிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel