பல்லடம் கள்ளக்கிணறு கிராமத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்லமுத்து என்பவர் இன்று (செப்டம்பர் 4) கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு (செப்டம்பர் 3) இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியுள்ளனர்.
இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை முதலில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இதனை தட்டிக்கேட்க வந்த அவரது தம்பி மோகன்ராஜ் மற்றும் மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரை அடுத்தடுத்து அந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.
இதில் அவர்களது கை, கால்கள் தனித்தனியாக வெட்டி வீசப்பட்டன. இதனிடையே, கண் இமைக்கும் நேரத்தில் 4 பேரையும் வெட்டிச்சாய்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, பல்லடம் டி.எஸ்.பி. சவுமியா மற்றும் போலீசார் வந்தனர்.
இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருப்பூர் அருகில் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் விசாரணை தொடங்கினர்.
முன்விரோதத்தின் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
இதில் முன் விரோதத்தில் தான் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி, கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (34) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணப் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேசை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.
இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் சிலர் செந்தில்குமார் இடத்தில் மது அருந்தி பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இச்சூழலில், ”திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதேபோல் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?
குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் செல்லமுத்து என்பவர் இன்று (செப்டம்பர் 4) கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.
கொலை செய்யப்பட்டதில் மோகன்ராஜ் என்பவர் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜனதா கிளைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘போட்- நெய்தல் கதை’: கானா பாடலை பாடிய சுதா ரகுநாதன்
2 வது முறையாக நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்!