பழனி முருகன் கோயிலில் ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவுக்கு பழனி தயாராகி வருகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் வருகிற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றுதலுடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் – 24.01.2024 இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள், வெள்ளி ரதம் – 24.01.2024 இரவு 9.00 மணிக்கு மேல், 25.01.2024 தைப்பூசத்தைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் அன்று மாலை 4.30 மணிக்கு மேல், தெப்பத்தேர் 28.01.2024 இரவு 7.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 28.01.2024 இரவு 11.00 மணிக்கு மேல் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய நிகழ்வான ஏழாம் திருவிழாவான தைப்பூச திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவார்கள். இதற்காக பக்தர்களுக்கு குடிநீர், தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட முன்னேற்பாடு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, காவல்துறை அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை, போக்குவரத்து காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தைப்பூசத் திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: மண்ணின் மகத்துவம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
alagu kuthuthal kavadi