பிரசித்திப் பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் காலாவதி தேதியை குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் பழனி கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கோயிலில் வழங்கப்பட்ட லட்டு, அதிரசம் உள்ளிட்டவை கெட்டுப்போய் சாப்பிட முடியாதபடி இருந்ததாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பழனியில் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்களை தயாரிக்கும் நிலையங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “பழனி திருக்கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை தயார் செய்வதற்கு சுத்தமான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அந்த பிரசாதங்களை பாக்கெட்டுகளில் அடைக்கும் முறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பஞ்சாமிர்தத்தில் இனி காலாவதி தேதி குறிப்பிடப்படும். காலாவதி தேதியில் இருந்து மேலும் 15 நாட்கள் அதிகமாகவும் பயன்படுத்தலாம். பஞ்சாமிர்தத்திற்கு காலாவதி தேதி குறிப்பிடப்படுவதைப் போல் இனி முறுக்கு, லட்டு, அதிரசம் உள்ளிட்ட மற்ற பிரசாதங்களுக்கும் காலாவதி தேதியை குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
சண்டே ஸ்பெஷல்: சுவையான சூப் தயாரிக்க ஈஸி டிப்ஸ்!
ஜே. பி. நட்டாவை சந்திக்கப் போகும் தலைவர்கள் யார் யார்?
எங்கே செல்லும் இந்தப் பாதை: அப்டேட் குமாரு
போக்சோவிலும் பொய் வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடித் தீர்ப்பு!