palani murugan kovil thaipoosam

தைப்பூசம்: பழனி முருகன் கோவிலின் சிறப்பு பூஜைகள்!

தமிழகம்

உலகப் பிரசித்தி பெற்ற பழனி, மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (ஜனவரி 29) வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள்.

இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (ஜனவரி 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடத்தி கொடி பூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது.

palani murugan kovil thaipoosam

நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருவாவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதி உலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற பிப்ரவரி 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.

மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முக நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்குத் தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வேதபாராயண முறைப்படி துவங்கியது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச திருவிழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனால் இன்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பாலசுப்பிரமணியம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர்.அதனைத்தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடிமரத்தில், சேவல் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

திருத்தேருக்கு முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் பிப்ரவரி 4ம் தேதி, காலை, 7:00 முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், பகல், 12:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தலும் தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிரசித்தி பெற்ற கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது.

முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

காலை 10.30 மணிக்குத் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாகத் தேர் சென்று பின்னர் நிலையை வந்தடையும். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவாக பிப் 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 6-ந்தேதி திருக்கோவில் திருக்குளத்தில் ஆராட்டு நடைபெறும்.

திருவிழா நாட்களில் புஷ்ப விமானம், சிங்க வாகனம், கமலம் வாகனம், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆதிசேஷ வாகனம், யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடைபெறும்.

9-ம் திருவிழாவான பிப் 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும். 10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

கடந்த இரு மாதங்களாகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருவிழாவுக்குப் பக்தர்கள் சென்று வந்த நிலையில் தற்போது முருகப்பெருமானுக்கு காவடி சுமந்து பல்வேறு நேர்ச்சைகளுடன் பக்தர்கள் முருகனைத் தரிசனம் செய்யப் பிரபலமான முருகன் கோயில்களுக்குப் பாதயாத்திரை பயணத்தை இன்று முதல் துவக்கியுள்ளனர்.

சக்தி

U19 உலகக்கோப்பை: இந்தியா சாம்பியன் – மெகா பரிசு அறிவித்த பிசிசிஐ!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: 10வது முறை சாம்பியன்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *