பழனியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் கிழக்கிந்திய நிறுவனம் 19-ஆம் நூற்றாண்டில் வழங்கிய முத்திரைத்தாள் இருந்தது தெரியவந்துள்ளது.
பழனி அடிவாரத்தில் மீனா என்கிற வியாபாரி பல ஆண்டுகளாகக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த மாதம் பழனி வருவாய்த் துறை அதிகாரிகள், பழனி அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற கோரி ஆணையிட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு வாங்கியுள்ளார் மீனா. ஆனால் அந்த தடை உத்தரவு சில வாரங்களுக்குத்தான் செல்லுபடியாகும். எனவே, மீனா கடையை காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது அவரது அப்பாவின் ஒரு பழைய பெட்டி அவருக்குக் கிடைத்துள்ளது. அதில் மற்ற பொருட்களுடன், பழைய பத்திரத்தாள் ஒன்று கிடைத்துள்ளது.
இதை அவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வி.நாராயணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். அந்த பத்திரத்தாளை ஆராய்ந்து பார்த்த நாராயணமூர்த்தி, அது நமது நாட்டை ஆண்ட கிழக்கிந்திய நிறுவனத்தால் பாலசமுதரம் ஜமீந்தார் சின்னோபலம்மாவுக்கு 19-ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்டது என்று கண்டுபிடித்துள்ளார்.
“பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி, 1818 வருடம் வழங்கப்பட்டுள்ள அந்த தாளில் சின்னோபலம்மா வின் ஜமீனை நிர்வகித்த 23 மேலாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளது.
அந்த தாளின் இடது மூலையில் இரண்டணா என்று தமிழ், உருது, ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் அச்சிடப்பட்டுள்ளது. வலது மூலையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் முத்திரையும், அதன் கீழ் பொக்கிஷம் என்ற வார்த்தை தமிழ், ஆங்கிலம், உருது மற்றும் தெலுங்கில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த தாளில் குறிப்பிடப்பட்டுள்ள 23 மேலாளர்கள் கவுண்டர், தேவன், ராவுத்தன், செட்டி போன்ற வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.
சின்னோபலம்மாவின் கணவர் வேலாயுத சின்னோப நாயகர் பாலசமூதிரத்தின் ஜமீன்தாராக இருந்துள்ளார். அவர் இறந்த பிறகு, சின்னொபலம்மாவை ஜமீன்தாராக நியமித்துள்ளது கிழக்கிந்திய நிறுவனம்.
இந்த ஜமீனை நிர்வகிக்க கிழக்கிந்திய நிறுவனம் அவருக்கு 30 தங்கக் காசுகள் கொடுத்துள்ளது. இந்த தாளிலிருந்த ஒரு ஓட்டையில் நூல் ஒன்று இருந்திருக்கிறது. இது மேலும் சில தாள்கள் இதனுடன் இருந்திருக்கக் கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது”என்று நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
10 மாநிலங்களில் 12 தொழில் நகரங்கள் : உபிக்கு இரண்டு – தமிழகத்தில்?
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா ?- மெட்ரோ ஸ்ரீதரன் சொல்வது என்ன?
சென்னை போலீசாருக்கு ரேட்டிங் : இரண்டுக்கு குறைந்தால் ட்ரான்ஸ்பர்?