பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறு… என்னென்ன பரிசுகள் தெரியுமா?

Published On:

| By Kavi

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று அவனியாபுரத்தில் நடந்த போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திக் முதலிடத்தை பிடித்தார்.

15 காளைகளை அடக்கி குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 2ஆவது இடத்தையும், 14 காளைகளை அடக்கி திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இதில் முதல் பரிசு வென்ற கார்த்திகிற்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிஸ்ஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவின் பெயரில் அவிழ்த்து விடப்பட்ட காளை சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் பெயரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரை பெற்றது.

மொத்தமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் இன்று(ஜனவரி 15) பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனை மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக முதலில் 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், 1,100 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 சுற்றுகளாக போட்டி நடைபெறவுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் காளைக்கு பரிசாக டிராக்டர் மற்றும் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படவுள்ளது.

தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படவுள்ளன. டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், இரு சக்கர வாகனங்கள், ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்களும் வீரர்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேறவிருந்த 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் மது அருந்திய காரணத்தினாலும், 3 பேர் எடை குறைவு காரணத்தினாலும் நீக்கப்பட்டுள்ளனர்.

பிரியா

தை மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel