திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில், சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டு நாளை (மார்ச் 17) மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள இந்த புதிய பத்மாவதி தாயார் திருக்கோயிலுக்கான இடம் திரைப்பட நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானது.
அவர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்த இடத்தைக் கோயில் கட்டுவதற்காகக் கொடுத்தார்.
அதற்கான பணிகளை 2019ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது. அந்த ஆலயப் பணிகள் தற்போது முடிவுபெற்று புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் சென்னையில் நாளை மஹா கும்பாபிஷேகம் காண உள்ளது.
இந்த ஆலயம் கட்டி முடிக்க 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. நிலத்தின் மொத்த அளவு ஆறு கிரவுண்டு.
மூன்று கிரவுண்டு நிலத்தில் தாயார் திருக்கோயிலும் மீதமுள்ள இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், மண்டபம், மடப்பள்ளி ஆகியன கட்டப்பட்டுள்ளன.
இன்று காலை, மாலை இரண்டு வேளைகளிலும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. நாளை காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பிறகு காலை 10 மணி முதல் 11 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பாதுகாப்பு வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொள்கிறார்.
ஆலயத்தின் கருவறையில் திருச்சானூரில் அருள்பாலிப்பதைப்போன்ற பத்மாவதி தாயாரின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் திருப்பதி சென்று தாயாரை தரிசனம் செய்யும் அனுபவத்தை இங்கே பெறலாம் என்கிறார்கள்.
ராஜ்
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் ரெய்டு!
பிரஷாந்த் கிஷோர் எதற்காக இப்படி செய்கிறார்?: சீமான்