முகத்தைப் பார்த்தாலே சாதியைக் கண்டுபிடிக்கும் பேராசிரியை சஸ்பெண்ட்!

தமிழகம்

சாதி பற்றி மாணவர் ஒருவரிடம் பேசிய சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவரும், பேராசிரியையுமான அனுராதா இன்று (ஆகஸ்ட் 25) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகவும் பேராசிரியையாகவும் பணியாற்றி வருபவர் அனுராதா.

இவர் தனது துறை மாணவர்களிடம் செல்போனில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோ பதிவில், ‘முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா அல்லது SC-யா எனத்தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்பதுகூட எனக்கு தெரியாது.

நீ என்ன கம்யூனிட்டி?’ என்று கேட்டு தமிழ்த்துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்தும் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இதற்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.

இதுதொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வம் புகார் அளித்தார்.

மேலும் இந்த ஆடியோ தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி கமிசன் சார்பிலும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி நிர்வாகக் குழுவின் சார்பாக இதுகுறித்து விசாரிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு அளித்த விசாரணையில் பேராசிரியை அனுராதா, இதுபோன்று தொடர்ச்சியாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் சாதிய வன்மத்துடன் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அவரை இன்று (ஆகஸ்ட் 25) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறது.

சமீபகாலமாக, ஆசிரிய பெருமக்கள் இதுபோன்று மாணவர்களிடையே சாதிரீதியாக பேசுவது அதிகரித்து வருகிறது.

ஜூன் 2022, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் போனில் சாதிரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

பாழாகும் பச்சையப்பன் அறக்கட்டளை: கவனம் செலுத்துமா கல்வித்துறை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *