புரதம், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவை சரிவிகிதத்ததில் இருப்பதே சமச்சீர் டயட் (Balanced Diet). மேற்சொன்ன அனைத்துச் சத்துகளும் உடலுக்குத் தேவை என்பதே நிதர்சன உண்மை. அறுசுவைகளும் கலந்த உணவை சாப்பிடுவதே அனைவருக்கும் ஏற்றது. பாதுகாப்பானது. சிறந்தது. அதற்கு இந்த ஸ்வீட் பச்சைப்பயறு ரெசிப்பி உதவும். பச்சைப்பயறு கொழுப்பைக் குறைக்கும். ரத்தச் சோகையைச் சரிசெய்யும். சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் வெல்லம், இரும்புச்சத்து நிறைந்தது. சுக்கு, அலுப்பை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும்.
என்ன தேவை?
பச்சைப் பயறு – 1 கப்
பொடித்த வெல்லத்தூள் – கால் கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
நெய் – 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
சுக்குத்தூள் – 2 சிட்டிகை
எப்படிச் செய்வது?
பச்சைப் பயறை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை மிதமான தீயில் வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஊறிய பச்சைப் பயறை குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வெந்த பச்சைப் பயறை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, வெந்த பச்சைப் பயறு, வெல்லக்கரைசலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாக வந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். ஸ்வீட் பச்சைப்பயறு ரெடி.
கிச்சன் கீர்த்தனா: டேட்ஸ் பர்ஃபி
கிச்சன் கீர்த்தனா: சங்குப்பூ டீ