வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு ‘தண்ணீ’ காட்டும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்!

வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் பெற முடியாமல் அதன் உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வெள்ளம் காரணமாக இந்த மாவட்ட மக்களின் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின.

சாதாரண கார், உயர் ரக கார்கள், சென்சார் பொருத்திய வாகனங்கள் என பல லட்சம் மதிப்புள்ள கார்களும் சேதமடைந்தன. தற்போது வரும் சொகுசு கார்களில் உள்ளேவும், வெளியேவும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. முழுக்க, முழுக்க எலக்ட்ரானிக் வாகனங்களாக இருப்பதால் காருக்குள் தண்ணீர் புகுந்ததாலும், பல இடங்களில் மூழ்கியதாலும், காரில் இருந்த சென்சார்கள் பழுதடைந்துள்ளன.

இதன் காரணமாக ஆட்டோமெட்டிக்காகவே விடாமல் ஹாரன் அடிக்கிறது… லைட் எரிகிறது. இன்ஜின்கள் பழுதடைந்து கார்களை ஸ்டார்ட் செய்ய முடியாமல் அதன் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

சொந்த பயன்பாட்டுக்காக குறைந்தது 10 லட்சம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி வரையில் கார் வாங்கியவர்கள், ஐந்து, ஆறு வருடங்கள் கடந்தும் தவணைகளை முழுமையாக அடைக்க முடியாத நிலையில், இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், வருமான தொழில் பயன்பாட்டுக்காக(வாடகை கார்) கார்களை வாங்கிய உரிமையாளர்கள் பலர், மாதம்தோறும் கடன் தவணை, வருடம் தோறும் இன்சூரன்ஸ், எப்சி என இவ்வளவு செலவுகளுக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வண்டிகளை சரி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

வாடகைக்கு போனால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றிருக்கும் உரிமையாளர்கள் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள்.

கார்களை போலவே இரு சக்கர வாகனங்களையும் சரி செய்ய முடியாமல் அதன் உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர். ஸ்கூட்டி, பைக்குகளை வீட்டில் ஒருவராக நினைத்து பார்த்து பார்த்து வைத்திருந்த ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இதுவரையில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்திருக்கின்றன.

இந்நிலையில் அந்தந்த கார் சர்வீஸ் சென்டர்களுக்கு எடுத்துச் சென்றால், ‘எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் போட்டிருக்கிறீர்கள்’ என்று கேட்கிறார்கள்.
பொது நிறுவனமாக இருந்தால், அந்த நிறுவனத்தை கார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது. தனியாரில் இன்சூரன்ஸ் போட்டிருந்தாலும் முழுமையாக க்ளைம் செய்ய முடியாது. காரின் தற்போதைய மதிப்பை விட இரண்டு மடங்கு செலவாகும்’ என்று சொல்லி அனுப்பிடுகிறார்கள் என்று கார் உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.

இருந்தாலும் பரவாயில்லை, சர்வீஸ் செய்து கொடுங்கள் என்று சொன்னால், காரை சரி செய்ய 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்று சொல்வதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதைப்பற்றி நாம் விசாரணையில் இறங்கினோம்.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தக்‌ஷினாமூர்த்தி நகரில் வசிக்கும் கார் உரிமையாளரும் ஓட்டுநருமான பாரதி, ”புதிதாக கார் வாங்கும்போது இன்ஸ்சூரன்ஸ் போடுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பேசுகிறார்கள்.

ஒவ்வொரு கார் பிராண்டுடைய ஷோரூமும் ஒவ்வொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் டை அப் வைத்துக்கொண்டு 60:40 என்ற அடிப்படையில் வசூல் செய்கிறார்கள்.

அதென்ன, 60:40 என்று கேட்டால் தனியார் நிறுவனங்களிடம் ஒரு லட்சம் இன்சூரன்ஸ் என்றால் அதில் 40 ஆயிரம் ரூபாயை ஷோ ரூம் டீலருக்கு கொடுப்பார்கள். 60 சதவிகிதத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் எடுத்துக்கொள்வார்கள்.
இந்த கொள்ளைக்காகத்தான் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பொது நிறுவனத்திடம் போகாதீர்கள், இன்சூரன்ஸ் பெற முடியாது. எங்களிடம் போட்டுக்கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள்.

ஆனால் இப்போது வெள்ளத்தில் மூழ்கிய வண்டியை எடுத்துச் சென்றால், முழு இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது என்று மறுக்கிறார்கள். எனது நண்பர் வேலு, மாருதி எர்டிகா கார் வாங்கி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. அதை சர்வீஸுக்கு விடச்சென்றால், ‘விட்டுட்டு போங்க பார்க்கிறோம்’ என்று அலட்சியமாக சொல்கிறார்கள்” என்றார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் நம்மிடம் கூறுகையில், “நான் ஃபோல்ஸ்வேகன் கார் வைத்திருக்கிறேன். 2018ல் எடுத்தேன். 6 வருடம் ஆகிறது. பொது நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸில் போட்டிருக்கிறேன்.

வண்டிக்கு இப்போதுதான் ஒன்றரை லட்சம் செலவு செய்தேன். திடீரென மழை வெள்ளம் வந்ததால் தண்ணீரில் மூழ்கிவிட்டது. காரை சர்வீஸுக்கு விட அரியாங்குப்பம் KUN கார் சர்வீஸ் சென்டரில் விட போனேன்.

அங்கிருந்தவர்கள் காரை பார்த்துவிட்டு, எந்த இன்சூரன்ஸ் என்று கேட்டார்கள். நேஷனல் இன்சூரன்ஸ் என்றேன். அதற்கு அவர்கள், இதை யாரும் மதிக்கமாட்டார்கள். நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி எங்களுடன் டை-அப்பில் இல்லை. எங்கள் வழிகாட்டுதலின் படி தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் போட்டிருந்தால் உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.

8 வருடம் பழைய வண்டியை சரி செய்தால், காரின் தற்போதைய மதிப்பை விட சர்வீஸ் செய்ய அதிக செலவாகும். அப்படியே சர்வீஸுக்கு விட்டாலும் 6 மாதத்துக்கு மேல் ஆகும் என்று மிரட்டாத குறையாக அனுப்பினார்கள்” என்று கூறினார்.

ஃபோல்ஸ்வேகன் டீலர் மூலமாக பெங்களூரு, புனே பகுதிகளில், கார் மெக்கானிக்காக பயிற்சி பெற்று, கடலூர் சாலை பெரியக்காட்டு பாளையத்தில் கார் வொர்க்‌ஷாப் வைத்துள்ள ரமேஷிடம் பேசினோம்.

“வண்டி மதிப்பை விட அதிகம் செலவாகும் என்பதால், ஆடி, ஃபோல்ஸ்வேகன், ஸ்கோடா போன்ற கார்களை வைத்திருப்பவர்கள், வெள்ளத்தால் பாதிப்படைந்த தங்களது வாகனங்களை கம்பெனி சர்வீஸில் விடமுடியாமல் பரிதவித்து வருகிறார்கள்” என்றார்.

இதற்கு மாற்று வழி என்னவென்று கேட்டோம். “இந்த வண்டிகள் எல்லாம் எலக்ட்ரானிக் சிஸ்டம் கொண்டவை. வண்டிக்கு முக்கியமான மதர் போர்டுகளான ஈசிஎம், பிசிஎம் போர்டுகளே மூன்று லட்சம் வந்துவிடும்.

மழையில் நனைந்திருப்பதால் நான்கு கதவுகளின் மோட்டார்களும்(கண்ணாடி இறக்கக்கூடியது) சென்சார்களும் பழுதடைந்திருக்கும். இவை அனைத்தையும் புதிதாக போட்டால் பல லட்சங்கள் செலவாகும். அதை குறைந்த விலையிலும் சரி செய்யலாம்.
கோவையில் பழைய வண்டிகளில் இருந்து எடுத்த உதிரி பாகங்களை செகெண்ட் ஹேண்டில் வாங்கி சரி செய்துகொடுக்கலாம்.

அதுபோன்று காரை பிரித்து, எதில் பழுது ஏற்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அதை சரி செய்து கொடுக்கலாம். அதை தவிர்த்து கம்பெனிகள் மொத்தமாக மாற்ற வேண்டும் என்று பயமுறுத்தாமல்… எது தேவையோ அதை மட்டும் மாற்றி கொடுத்து செலவை குறைக்கலாம்” என்றார்.

கடலூரில் பிரபலமான ’அம்மா கார் வொர்க்‌ஷாப்’ மெக்கானிக் சரவணன் கூறுகையில், “எங்களிடம் சர்வீஸுக்கு நிறைய வண்டிகள் வரும். ஆனால் அவர்கள் கட்டணத்தை க்ளைம் செய்ய அவ்வளவு சிரமப்படுவார்கள். காப்பீட்டு திட்டம் என்பதே வாகனங்களையும், அதன் உரிமையாளர்களையும் காப்பாற்றத்தான். ஆனால் இன்சூரன்ஸ் சிஸ்டமே கொலாப்ஸாக இருக்கிறது.

இதற்கு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புற்றீசலாக பெருகுவதுதான் காரணம்.
5 வருடம் கடந்த வண்டிகளை மொத்த நஷ்டம் என்று ஒற்றை வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார்கள். இதற்காகவா ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும்… பேரிடர் காலத்தில் விதிவிலக்கு இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

நாம் நேஷனல் இன்சூரன்ஸ் டோல் ப்ரீ நம்பரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்.
புவனேஷ்வரி என்ற பிஆர்ஓவிடம், நேஷனல் இன்சூரன்ஸ் என்றாலே சர்வீஸ் செய்ய மறுக்கிறார்களே, தனியார் இன்சூரன்ஸுக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவம் அரசு பொது நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸுக்கு கொடுப்பதில்லை. முகம் சுழிக்கிறார்கள்” என்றோம்.

எந்த சர்வீஸ் செண்டரில் இருந்து அப்படி சொல்கிறார்கள் என்று அவர் கேட்டபோது, புகாருக்கு உள்ளான நிறுவனத்தின் பெயரை பதிவு செய்தோம். அப்போது மண்டல மேலாளர் நளினி ராஜேந்திரனிடம் முறையிடுங்கள் என்று சொல்லி, அவரது கைபேசி எண்ணை கொடுத்தார்.

அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டால் தற்போது தொடர்பு கொள்ள முடியாது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்ற கம்ப்யூட்டர் குரல் ஒலித்தது.
பொதுநிறுவனமான முதன்மை இடத்தில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியிடம் “பேரிடர் காலங்களில் பழுது ஏற்பாட்டால் முழுமையாக இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாதா?

பெரும்பாலான கார் ஷோரூம்களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தைதான் பரிந்துரை செய்து முக்கியத்துவம் கொடுக்கிறார்களே” என்று கேட்டோம்.
“இன்சூரன்ஸ் ஸ்கீமில் சரியான வரைமுறைகள் இல்லை. ஒருவர் வண்டி வாங்கினால் 10 வருடம் கடந்தும் கூட, 10 பைசா க்ளைம் பண்ணாமல் ஜெனியூனாக இருக்கிறார்கள். அவர் செலுத்திய பணத்தில் பாதி கொடுப்பதற்கு கூட ஒரு நிறுவனம் கூட முன்வருவதில்லை. அதேபோல, 10 வருடங்களுக்கு பிறகு அந்த வண்டி விபத்தில் சிக்கினாலோ பழுதானோலோ முழு செலவை இன்சூரன்ஸு நிறுவனம் கொடுக்க முன்வருவதில்லை.

காரணம் ஆண்டுக்கு ஆண்டு 10 சதவிகித வரை வாகனத்தின் மதிப்பு குறைந்து வரும்.
5 வருடங்களை கடந்துவிட்டால் வண்டியின் மதிப்பு 50 சதவிகிதமாக குறைந்துவிடும். அப்போது வண்டிக்கு பழுது ஏற்பட்டால் செலவாகக் கூடிய செலவில் இன்சூரன்ஸ் நிறுவனம் 30 சதவிகிதம் தான் கொடுக்க முன்வரும்.

ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் 5 வருடங்களுக்கு மேலான வண்டிகளுக்கு இன்சூரன்ஸ் போட முன்வரமாட்டார்கள். பொது நிறுவனம், 15 வருட வண்டிகளுக்கு இன்சூரன்ஸ் போடும். ஆகவே தனியார் நிறுவனங்கள் பணத்தை செலவழிக்காமல், கொழுக்கமட்டுமே செயல்படுவார்கள்.

அதனால் இப்போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்கள் 5 வருடங்களை கடந்திருந்தால் முழுமையாக இன்சூரன்ஸ் கிடைக்காது. அதற்கு மொத்த நஷ்ட மதிப்பைதான் போடுவார்கள். இதனால் வாகன உரிமையாளருக்குதான் நஷ்டம்.
5 வருடங்களுக்கு உள்ளான வண்டிகள் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சர்வேயர் வந்து நேரடியாக வண்டியை பார்க்கும் வரை ஸ்டார்ட் செய்யக்கூடாது. அப்படி ஸ்டார்ட் செய்துவிட்டால் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது.

அதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வண்டிகளை சர்வேயரிடம் காட்டிவிட்டு சர்வீஸுக்கு விட்டால் நல்லது” என்றார்.

வாகன உரிமையாளரின் கவலையும், கஷ்டங்களை பற்றி புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டோம்.

இதில், அரசு செய்வதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நிர்பந்தம் செய்யமுடியாது என்றனர்.

அதிக வெள்ள பாதிப்பை சந்தித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியை தொடர்புகொண்டு வாகன உரிமையாளர்கள் வேதனைகள் எடுத்துச் சொன்னோம்.
அதற்கு அவர், நாங்களும் பாதிக்கப்பட்ட வாகனங்களை பட்டியல் எடுத்து வருகிறோம். விரைவில் கார் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து சிறப்பு முகாம் நடத்தப்போகிறோம். வாகன உரிமையாளர்களின் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளது” என்று ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

கொடநாடு வழக்கில் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச்சு : மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவு!

மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் : நாளை பதவியேற்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts