47வது சென்னை புத்தக கண்காட்சியில் ரூ.10 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக பபாசி செயலாளர் எஸ்.கே முருகன் கூறியுள்ளார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில் ஏற்பாடு செய்த 47வது புத்தக கண்காட்சி ஜனவரி 03 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் பபாசி செயலாளர் எஸ்.கே முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வரலாற்று சிறப்புமிக்க 47வது சென்னை புத்தக கண்காட்சிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. அது இந்த ஆண்டும் தொடர்ந்தது.
தொடக்க நாட்களில் மழை பெய்த போது சிரமத்தை கருதாமல் வாசகர்கள் மழையிலும் குடை பிடித்துக்கொண்டு புத்தகங்கள் வாங்க வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், கடைசி நாளான இன்றுவரை 11 லட்சம் வாசகர்கள் வந்துள்ளார்கள். மேலும் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா