போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த புதிய அரசாணையை, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வரவேற்றுள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தி தமிழக அரசு நேற்று (அக்டோபர் 20) உத்தரவு பிறப்பித்தது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் (2019) சில அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு, போக்குவரத்து ஆணையரின் பரிந்துரையை ஏற்று, அபராதத்தை உயர்த்தி, அரசாணை பிறப்பித்தது.
அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம், அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், போதையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டிருந்த இந்த புதிய அரசாணையை, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, இன்று (அக்டோபர் 21) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
”போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
2019ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் மத்திய அரசின் பரிந்துரையின்படி, இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது சிறப்பு.
கட்டுப்பாடில்லாமல் பன்மடங்கு பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால், இந்த மாற்றங்களை முறையாக அமல்படுத்துவதில் தமிழக காவல் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.
பன்மடங்கு அபராதம் என்பதால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி காவலர்களை அடிபணிய செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் இந்த அபராதங்களை விதிக்கும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதோடு, அந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.
அதே வேளையில், நிலைமையை தங்களுக்கு சாதாகமாக்கி கொண்டு சமரச முயற்சி என்ற பெயரில், அந்த அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
லஞ்சம் பெறும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். விதி மீறல்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படுவது, வசூலிப்பது போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும்.
குறிப்பாக ஒரு வழிப்பாதைகளில் எதிர் திசையில் வாகனம் செலுத்துவோரை கண்டித்து அதிக தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.
சில அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை புறந்தள்ளி மக்கள் நலன் கருதி உறுதியான, வெளிப்படையான தன்மையோடு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கனமழை: எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!