தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று (மே 23) மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் நேற்று (மே 22) லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
கனமழை எச்சரிக்கை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
ஆரஞ்சு நிற எச்சரிக்கை
“தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 23) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 25 முதல் மே 28ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பின்னர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைபெறும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மே 26ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
மே 25ஆம் தேதி வரை மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு – மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மே 26ஆம் தேதி வரை வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக்கடல், குமரிக்கடலின் சில பகுதிகளில் மே 19ஆம் தேதி தொடங்கியது.
தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால், இந்த வருடம் முன்னதாக மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
“கண்மணி அன்போடு” : மஞ்சும்மல் பாய்ஸ்க்கு இளையராஜா செக்!