நீதிபதியை மாற்றக் கோரிய பன்னீர்செல்வம்:  நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தமிழகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன்  ராமசாமி மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர் தரப்பு வழக்கறிஞர் நேற்று (ஆகஸ்டு 4) மாலை மீண்டும் தலைமை நீதிபதியை சந்தித்துள்ளார்.  இது நீதித்துறை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

9.30 க்கு பொதுக்குழு… 9 மணிக்குத் தீர்ப்பு! 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு தடை கேட்டு ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஜூலை  8 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று முடிந்த நிலையில்… வழக்கின் தீர்ப்பை ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு வழங்குவதாக ஒத்தி வைத்தார் நீதிபதி கிருஷ்ணன்  ராமசாமி. அன்று காலை 9.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட இருந்த நிலையில், இவ்வாறு தீர்ப்பை 9 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

விசாரணை முடிந்த நிலையில் முன்னரே தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக இருக்கும், ஆனால் பொதுக்குழு கூடுவதற்கு அரைமணி நேரம் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டால், ஒருவேளை பொதுக்குழு கூடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அதை எதிர்த்து அப்பீல் செய்து பொதுக்குழுவை நிறுத்த முடியாமல் போகலாம் என்று கருதினர் பன்னீர் தரப்பு வழக்கறிஞர்கள்.

இது தொடர்பாக ஜூலை 8 ஆம் தேதி இரவே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட ஓ.பன்னீர் தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டனர். ஆனால் சந்திக்கவில்லை. தீர்ப்பை ஒத்தி வைப்பது நீதிபதியின் பிரத்யேக உரிமை என்பதால் அவர்கள் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.

பன்னீரை விமர்சித்த நீதிபதிநீதிபதியை மாற்றக் கோரிய பன்னீர்

அதன் பின் ஜூலை 11 ஆம் தேதி  காலை 9 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி அளித்ததோடு, தன் தீர்ப்பில் ஓ.பன்னீர் செல்வத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தத்  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் ஓ.பன்னீர். ஆனால் இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மேல் முறையீட்டு வழக்கு மீண்டும்  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடமே விசாரணைக்கு வரும் என நீதிமன்ற வட்டாரங்களில் தகவல் வெளியான நிலையில்,   ஓ.பன்னீர்செல்வம் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து,  ‘அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இருந்து மாற்றி வேறு நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று ஆகஸ்டு 3 ஆம் தேதி கோரிக்கை விடுத்தனர்.  உயர் நீதிமன்றப் பதிவு அலுவலகத்திலும் இதுகுறித்து முறையிட்டிருந்தனர்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘இந்த கோரிக்கையில் எனக்கு உடன்பாடில்லை. இந்த கடிதத்தை சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அனுப்பி அவரது கருத்தையும் கேட்டு முடிவெடுக்கிறேன்’ என்று கூறியதாக தகவல்கள் வந்தன.

பன்னீர் வழக்கறிஞரிடம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கேள்வி

இந்தப் பின்னணியில் இந்த வழக்கு எதிர்பார்த்தபடியே  நேற்று  (ஆகஸ்டு 4) நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பதிவாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு குறித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார்.

 “நீதிபதியை மாற்றக் கோரி நீங்கள் முறையிட்டது மலிவான நடைமுறை. நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் நடவடிக்கை” என்று குறிப்பிட்டார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் ஜி.ராஜலட்சுமி,  “தங்களது தீர்ப்பில் எனது கட்சிக்காரருக்கு எதிரான சில தனிப்பட்ட அவதானிப்புகள் இருந்ததால், அதுகுறித்து எனது கட்சிக்காரரின் அறிவுரைப்படி இந்த கோரிக்கை வைக்கப்பட்டது” என்று பதிலளித்தார். 

அதற்கு நீதிபதி, “என்ன தனிப்பட்ட அவதானிப்புகள்? நான் சொல்வது சரியா தவறா என்பதை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எனக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் மற்றும் எனது உத்தரவை ரத்து செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் வாதிடலாம். அதுதான் இயல்பு ”என்று நீதிபதி கூறினார்.  

மேலும்,  “ நீங்கள் அந்த கருத்துகளால்  பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய கருத்துக்களை நீக்கிடவேண்டும் என என்னிடமே முறையிட்டிருக்கலாம். அல்லது உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கலாம். உங்கள் கட்சிக்காரர் நீதிபதிக்கு எதிராக முறையீடு செய்யச் சொன்னால் நீங்கள் அதை பின்பற்றலாமா? உங்கள் கட்சிக்காரர் பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டதை சரியென்று நிரூபிப்பது போல்தானே இருக்கிறது?” என்று கேட்டார் நீதிபதி.

நீதிமன்ற அவமதிப்பு இது: எச்சரித்த நீதிபதி

மேலும்,  “நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இதில் தெளிவாக இருக்கிறது. ஒரு குடும்ப வழக்கில் நீங்கள் செய்ததைப் போல்தான் ஒரு  வாதி நீதிபதியை மாற்றக் கோரினார்.  நான் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு என்று குறிப்பிட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பினேன். தலைமை நீதிபதியும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதித்தார். நீதிபதியை மாற்றக் கோரியவர் இப்போது கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளார்” என்று கூறினார்.

நீதிபதியை சமாதானப்படுத்திய எடப்பாடி வழக்கறிஞர்

அப்போது இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான முன்னாள் அட்வகேட் ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான விஜய் நாராயணன்,   “ சில இளம் மற்றும் ஆர்வக் கோளாறான வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியை அணுகியதை  தாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களது நடவடிக்கைகளைப் புறக்கணித்து விடலாம்” என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை சமாதானப்படுத்த முயன்றார்.  

ஆனபோதும்  ஓ.;பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞரை கடிந்துகொண்ட நீதிபதி, ‘இதேபோல மற்ற வழக்கறிஞர்களும், மனு தொடுத்தவர்களும்  நீதிபதியை மாற்றவேண்டும் என்று வரிசையில் நிற்க ஆரம்பித்தால் என்ன ஆவது?” என்று கேட்டார்.  பிறகு இந்த வழக்கை இன்று  (ஆகஸ்டு 5) பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

நீதிபதியை மாற்ற மீண்டும் கோரிக்கை வைத்த பன்னீர் தரப்பு

நீதிமன்றத்தில் இவ்வளவு நடந்தும்,  இந்த விசாரணை முடிந்த பிறகு மீண்டும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள்  தலைமை நீதிபதி எம்.என். பண்டாரியை சந்தித்து. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கு விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து மீண்டும் பேசிய கருத்துகளை எதிர்த்து மீண்டும் முறையீடு செய்தனர். 

‘நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது வழக்கறிஞருக்கும் எதிரான கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளார். எனவே எங்களது மேல் முறையீட்டு வழக்கில் இந்த நீதிபதியை மாற்றிட வேண்டும்” என்று முறையீடு செய்தார் மூத்த வழக்கறிஞர் என்ஆர்.ஜி.பிரசாத்.

தலைமை நீதிபதி பண்டாரி இதுகுறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. எனினும் ஓ. பன்னீர்செல்வத்தின் வழக்கு இன்று (ஆகஸ்டு 5)  பிற்பகல்  2.15 மணியளவில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையிலேயே விசாரணைக்கு வர இருக்கிறது.

இன்று நீதிமன்றத்தில் என்ன நடக்குமோ என்று நீதித்துறை வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும், சட்ட வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வேந்தன்

தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்: செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை சவால்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.