கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் உள்ள கல்யாணி யானைக்குக் குளிக்க 60லட்சம் செலவில் நடைப் பயிற்சி பாதை நீச்சல் குளம் அமைக்கப்பட்டு இன்று (பிப்ரவரி 7) திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஏராளமான கோபுரங்கள், மண்டபங்கள், கலை நுட்பத்துடன் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளன.
இந்த கோயிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கல்யாணி யானை தான். இந்த கல்யாணி யானை கடந்த 1996ஆம் ஆண்டு பேரூர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
யானையைப் பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோயிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.
இந்த நிலையில் கல்யாணி யானை குளிக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவிலுக்கு அருகே உள்ள அங்காளம்மன் கோயில் பின்பகுதியில் 5.5 ஏக்கர் நிலத்தில் யானை குளியல் தொட்டி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த குளியல் தொட்டி பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடந்தது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டது.
இதனை அமைச்சர் மற்றும் அங்கு இருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது.
அதே பகுதியில் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சக்தி
சொன்னீங்களே… செஞ்சிங்களா?: அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!
யூடியூப் டிரெண்டிங்கில் ஆட்டநாயகனாய் வலம் வரும் நடிகர் விஜய்