மண்சரிவு காரணமாக கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அழகிய மலைகளின் நடுவே பயணித்து குகைகளுக்குள் புகுந்து செல்லும் இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகுகளை ரசிக்க ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கல்லார்,அடர்லி,ஹில்கிரோ ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாராங்கற்கள் விழுந்தது.
இதனால் கடந்த 14ஆம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்ற மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது.
மேலும் ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண தொகை முழுவதும் திருப்பி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தை சரி செய்யும் பணியை ரயில்வே ஊழியர்கள் செய்து வந்தனர்.
இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மலை ரயில் பாதையில் விழுந்திருந்த பாராங்கற்கள் மற்றும் மண் சரிவினை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.
இதை அடுத்து இன்று(டிசம்பர் 19) முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் உதகை இடையேயிலான மலை ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கலை.ரா