சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்டம் அமலுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. காவலர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என படித்தவர்களே இந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
நேற்று கூட (அக்டோபர் 6) திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 23 வயது மாணவன், ஆன்லைன் ரம்மியால் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் நடக்கும் தற்கொலைகளை தடுப்பதற்கு ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை இயற்றுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்தது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருந்த அவசரச் சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு கடந்த மாதம் 26-ந் தேதி கொண்டு வரப்பட்டு, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அதன் மீது கூடுதல் விபரம் கேட்டு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு அந்த அவசரச் சட்டம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா? அல்லது, ஒப்புதல் அளிப்பதற்கு முன்பதான ஆய்வு தொடர்ந்து ஆளுநர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டப்பேரவை கூடும் வரை ஒப்புதல் கிடைக்காவிட்டால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை இயற்றுவதற்கான மசோதாவை சட்டபேரவையில் முதலமைச்சர் அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தாக்கல் செய்வார்.
பின்னர் அது சட்டபேரவையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு கொண்டு வரப்படும். அந்த மசோதா மீது எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த மசோதா நிறைவேற்றப்படும்.
பின்னர் அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அப்போதும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வரும்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு சட்டசபை கூடுவதற்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் கிடைத்துவிட்டால், அது அரசிதழில் வெளியிடப்பட்டு அவசர சட்டமாக சட்டப்பேரவை கூடும்வரை அமலில் இருக்கும்.
அந்த அவசரச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்கூட, அதை சட்டமாக கொண்டு வருவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.
கலை.ரா
போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் அபேஸ்!
தலைவர் பதவி: வேட்பு மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின்!