தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை, சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆன்லைன் ரம்மி மூலம் அதிகளவு பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் விளையாடிய இவர், அதில் பணத்தை இழந்ததோடு, தொடர்ந்து மற்ற ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. மாறாக கடன் மட்டும் அதிகரித்திருக்கிறது. சுமார் 20 லட்சம் வரை இவர் கடன் பெற்று ஆன்லைன் ரம்மியை விளையாடியிருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பணத்தை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த இவர் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஒன்று எழுதியிருப்பதாகவும், அதில் ஆன்லைன் ரம்மி காரணமாக பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்ததாகவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ கடந்ததாக கடந்த மாதம் கூறியிருந்தார்.
இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்தசூழலில் இனி ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்புகளுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் காரணம் என்று அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சாலை விபத்தில் மறைந்த புகைப்பட கலைஞர்: யார் இந்த ஸ்டாலின் ஜேக்கப்?
ஐ.நா.வை அடுத்து அமெரிக்கா… கைலாசாவின் அடுத்த சறுக்கல்?