ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக , தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மலையாண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23), அங்குள்ள பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். அதனால் அதிக பணத்தை இழந்துள்ளார்.
’விட்டதை பிடிக்கிறேன்’ என்று சொல்லி நண்பர்களிடமும் கடன் வாங்கி அவர் விளையாடி இருக்கிறார்.
இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்க, விரக்தியடைந்த சந்தோஷ் நேற்று ( அக்டோபர் 5 ) இரவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில், சந்தோஷ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘என்னுடைய மரணத்திற்கு முழுக் காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’ என்று பதிவேற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமெரிக்காவில் இந்திய குடும்பம் கொலை: சிக்கிய வீடியோ ஆதாரம்!
”அடையாளத்தை மறைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது” – தமிழிசை